பிகார்: இந்தியா கூட்டணியில் பிளவு – பல தொகுதிகளில் நேரடி மோதல்! | TNNEWS

பிகார்: இந்தியா கூட்டணியில் பிளவு – பல தொகுதிகளில் நேரடி மோதல்! | TNNEWS

வெளியிடப்பட்ட தேதி

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான முரண்பாடு நீடிக்கிறது. இதனால், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இக்கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகின்றன.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பர் 14 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது, மனுக்களை திரும்பப் பெறும் அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிந்தது.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் 122 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வியாழக்கிழமை (அக்.23) கடைசி நாளாகும்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. மற்ற கட்சிகள் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 29, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 6 இடங்களில் களம்காண்கின்றன.

எதிரணியில் குழப்பம்: ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. பிகார் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இக்கூட்டணி சார்பில் தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

143 வேட்பாளர்களுடன் ஆர்.ஜே.டி முழுப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 21 பேர் பெண் வேட்பாளர்கள். பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வெளியாவதற்கு முன்பே ஆர்.ஜே.டி வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டனர்.

எதிர்த்துப் போட்டி: காங்கிரஸ் சார்பில் 61 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி 20, விகாஸ்ஷீல் இன்சான் கட்சி 16, இந்திய கம்யூனிஸ்ட் 9 இடங்களில் போட்டியிடுவதாக அக்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமுக உடன்பாடு எட்டப்படாததால், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாம்கட்ட தேர்தலுக்கு வேட்புமனுவை திரும்பப் பெற வியாழக்கிழமை கடைசி நாள் என்ற நிலையில், ‘இந்தியா’ கூட்டணி தங்களுக்குள் மோதும் தொகுதிகளின் எண்ணிக்கை அன்றைய தினம் உறுதியாகும்.

இந்தியா கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவை முன்னிறுத்த காங்கிரஸ் விரும்பவில்லை; அத்துடன், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அதிக தொகுதிகளைக் கேட்டு நெருப்பித்ததால் சுமுக உடன்பாட்டை எட்ட முடியாமல் போய்விட்டதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல், காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அக்கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

முதல்கட்டத்தில் 1,314 வேட்பாளர்கள்

முதல்கட்ட தேர்தலில் வேட்புமனு பரிசீலனையில் 300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 61 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து, மொத்தம் 1,314 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

ராஞ்சி, அக். 21: பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஒருங்கிணைந்த பிகாரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலம் என்பதால், எல்லையோர மாவட்டங்களில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கோரிவந்தது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், ஜார்க்கண்ட் அமைச்சருமான சுதிவ்ய குமார் கூறுகையில், ‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி உடனான கூட்டணியை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதன் மூலம் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

ஜார்க்கண்ட் தேர்தலில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, இடதுசாரிகள் என அனைவருக்கும் உரிய அளவுக்கு தொகுதிகளை ஜேஎம்எம் ஒதுக்கியது. ஆனால், பிகாரில் காங்கிரஸும், ஆர்.ஜே.டியும் தங்களுக்குள் பெரும்பாலான தொகுதிகளில் ஒதுக்கிக் கொண்டுவிட்டன. எங்களுக்கு தொகுதி ஒதுக்காமல் சதி செய்துவிட்டனர். எனவே பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் இருந்து ஜேஎம்எம் விலகுகிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *