புதுப்பிக்கப்பட்ட தேதி
:
பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வீட்டிற்கு மாநில முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை காலை வந்தார்.
கர்நாடக அரசின் தலைமைப் பதவிக்கான விவாதம் முடிவுக்கு வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம், சித்தராமையாவின் வீட்டிற்கு சென்ற சிவக்குமார், அவருடன் உணவு உண்டு ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில், சித்தராமையா தொடர்ந்து முதல்வராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிவக்குமாரின் அழைப்பின் பேரில், சித்தராமையா இன்று காலை உணவிற்கு அவரது வீட்டிற்கு சென்றார்.
சிவக்குமாரும் அவரது சகோதரரும் முன்னாள் எம்பியுமான டி.கே. சுரேஷும் சித்தராமையாவை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது முதல்வர் பதவிக்கான விவாதம் எழுந்தது. காங்கிரஸ் தலைமை, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், பின்னர் சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள் என்று தீர்மானித்தது.
முதல்வர் பதவிக்கான மோதல் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருந்தாலும், காங்கிரஸ் அரசு இரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்ததும், விவாதம் தீவிரமடைந்தது.
முழு ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிக்க மக்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக சித்தராமையா கூறினார். ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராக நியமிக்கப்படுவேன் என்று சிவக்குமாருக்கு கட்சித் தலைமை உறுதி அளித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில், இரு தலைவர்களும் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு காங்கிரஸ் உயர்நிலைக் குழு கேட்டுக் கொண்டது.