வெளியிடப்பட்டது
:
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: பக்தர்கள் திரளும் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து குவிந்துள்ளனர்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாட்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் பிற பூஜைகள் நடைபெறுகின்றன.
மாலை 4.30 மணிக்கு சுவாமி கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். இதையடுத்து, சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். இதனால் கோயில் வளாகம் பக்தர்களால் நிரம்பியுள்ளது. பக்தர்கள் கோயில் வளாகத்தில் பக்தி பாடல்களை பாடி வழிபடுகின்றனர். கோயில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 4,000 போலீசார், ஊர்காவல் படையினர், கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடற்கரையில் உயர் கோபுரங்கள் அமைத்து, ரகசிய கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து, ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு, கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
வெளிநாட்டு பக்தர்கள்: மலேசியா, இலங்கை, லண்டன் போன்ற நாடுகளிலிருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து ஆறு நாட்களும் விரதம் இருந்து வருகின்றனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த பரமானந்தம் பிள்ளை குழுவினர் 65-ஆவது ஆண்டாக கோயிலில் சிவன், பார்வதி, விநாயகர் என சுவாமி வேடங்களிட்டு பஜனை பாடி தரிசனம் செய்தனர். வண்ண மின் விளக்குகளால் ராஜகோபுரமும், கோயில் வளாகமும் ஜொலிக்கின்றன.
கட்டணமில்லா சுற்றுப்பேருந்து: பக்தர்களின் வசதிக்காக நகரின் எல்லையில் 17 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து 25 சுற்றுப் பேருந்துகள் மூலம் பக்தர்கள் கட்டணமின்றி நகருக்குள் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பேருந்து நிலையங்கள்: திருநெல்வேலி சாலையில் ஷபி டிரேட்ஸ் எதிர்புறமும், தூத்துக்குடி சாலையில் அரசு ஐடிஐ அருகிலும், நாகர்கோவில், கன்னியாகுமரி வழித்தடத்துக்கு பரமன்குறிச்சி சாலையில் சார்வோதயா சங்கம் அருகிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, சுற்றுப் பேருந்துகள் கோயிலுக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன அனுமதி சீட்டு இல்லை: ஆட்சியர் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கூறியதாவது: திருச்செந்தூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக வாகனங்களை நிறுத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், திங்கள்கிழமை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பக்தர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தனிநபர் வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி திருச்செந்தூருக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வாகன சிறப்பு அனுமதி அட்டை தனியாக ஏதும் எவருக்கும் வழங்கப்படவில்லை என அதில் தெரிவித்துள்ளனர்.